search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் பரிசோதகர்"

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார்.
    • சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

    சேலம்:

    மங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயிலில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை செல்ல ரெயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏறினார். பின்னர் அவர் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார். அவர் அதற்கான அனுமதி சீட்டையும் வைத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் இருந்த பயண அனுமதி சீட்டை பிடுங்கி கொண்டு என்னிடம் கேட்காமல் எப்படி ரெயிலில் ஏறலாம் என்று கூறியபடி தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    மேலும் பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய அவர் ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிக்கெட் பரிசோதகரை எச்சரித்தனர். இதனால் சற்று அமைதியான டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஓடும் ரெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • 'ஒரு கோடி கிளப்' என்ற ஒரு புதிய நடைமுறையை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியது.

    சென்னை :

    உரிய டிக்கெட் இன்றி ரெயிலில் செல்லுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முறையற்ற பயணத்தை தடுக்கும் வகையில், 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 'ஒரு கோடி கிளப்' என்ற ஒரு புதிய நடைமுறையை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியது.

    இதில், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த கிளப்பில் சேர்க்கப்படுவார்கள்.

    அந்தவகையில், ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை சென்னை கோட்டத்தை சேர்ந்த 3 டிக்கெட் பரிசோதகர்கள் எட்டியுள்ளனர்.

    சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்த குமார் 27 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் வசூலித்துள்ளார்.

    இதேபோல, சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இந்திய ரெயில்வேயில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    கூடைப்பந்து வீரரும்,முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளதாக தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்து உள்ளது.

    • டிக்கெட் பரிசோதகர் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவ் உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரசுக்கு கடந்த 12-ந்தேதி அகல்தத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக முன்னா குமார் என்பவர் பணியில் இருந்தார். அன்று நள்ளிரவு ரெயில் உத்தரபிரதேசம் அக்பர்பூர் பகுதியில் சென்ற போது முன்னா குமார், தனது கோச்சில் இருந்த பெண் பயணி ஒருவரின் தலையில் சிறுநீர் கழித்தார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுபற்றி சார்பெக் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவ் உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, இப்பிரச்சினையை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களை பொறுத்து கொள்ளவும் முடியாது. எனவே அவர் பணியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார், என்றார்.

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவின் நடவடிக்கை ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரெயில்வே டிவிசனில் டிக்கெட் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதிவிரைவு ரெயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்டது. இதில் அரவிந்த்குமார் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் ஏறி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ரெயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் செல்லும்போது, இதில் பயணம் செய்த சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவில் அலுவலராக பணியாற்றி வருபவருக்கும், அரவிந்துக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, அரவிந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, அரவிந்த், விழுப்புரத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரெயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் டிக்கெட் பரிசோதகர் எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் ரெயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்கியவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தாக்குதலுக்கு ஆளான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் கண்ணீர் மல்க கூறியதாவது,

    எஸ் 10 பெட்டியில் -8வது இருக்கையில் இருக்க வேண்டிய அந்தப் பயணி குடிபோதையில் தனது உடமைகளை இருக்கையில் வைத்துவிட்டு, ரெயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார்.

    உங்களது உடைமைகளை உங்களது இருக்கையில் வைத்துக் கொள்ளுங்கள். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக உறங்காதீர்கள் என கூறினேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, திடீரென கன்னத்தில் பளாரென தாக்கி விட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்துபூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என கூறினார்.

    எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறும்போது,

    எஸ். ஆர். எம். ஏ. தொழிற்சங்கம் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இங்கு மொழி பிரச்சனையில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. ஆனால் இந்த விஷயத்தில் யார் அவரை தாக்கி இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயாது என்றார்.

    ×